×

கழிவுநீர் தேக்கமாகும் சிவகாசி ஊரணிகள் நிலத்தடி நீர் விஷமாகும் அபாயம்

சிவகாசி, மார்ச் 5: சிவகாசியில் உள்ள ஊரணிகளில் கழிவுநீர் கலந்து மாசடைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்து வருகிறது.
சிவகாசியில் பல நீர் ஆதாரங்கள் உள்ளன.  இதன் மூலம் நகரில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிவகாசி செண்பககுட்டி தெப்பம் நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த பல ஆண்டுகளாக தெப்பத்தில் நிரம்பவில்லை. இதே  போன்று சிவகாசி மணிகட்டி ஊரணி தற்போது கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறிவிட்டது.

 இந்த ஊரணியில் முன்பு  விளாம்பட்டி விலக்கு, தட்டாஊரணி பகுதி மழைநீர் சேமிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. போர்வெல் நீரும் சுவையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த ஊரணியில் எஸ்எச்என் பெண்கள் பள்ளி தெரு, பட்டி தெரு போன்ற  போன்ற தெருக்களின் கழிவுநீர் கலக்கிறது. இதனால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஊரணியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஊரணி நீரில் குப்பைக்கழிவுகள்,  இறைச்சிக் கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர்.

இதனால் ஊரணி நீர் மாசடைந்து மிகவும் மோசமாக உள்ளதால் நிலத்தடி நீரும் பாதிப்படைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகளின் குடிநீரில் சேறும், சகதியும் கலந்து வருகிறது. இந்த குடிநீரை புழக்கத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் மைய பகுதியான பஸ்நிலையம் அருகே பொத்துமரத்து ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் நாராணாபுரம், மீனாட்சி காலனி, போஸ் காலனி, பகுதி மழைநீர் தேக்கி வைக்கப்படும். இந்த ஊணியில் முன்பு படித்துறை அமைக்கப்பட்டு மழைநீர் பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ஊரணி கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறிவிட்டது.

மேலும் ஊரணியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த பணி பாதியிலே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் தற்போது மீண்டும் ஊரணியில் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. ஊரணியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் இப்பகுதி நிலத்தடி நீர் மாசடைந்து விட்டது. இதனால் நீர் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவதாக பொதுக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags :
× RELATED வணிகர் சங்க கூட்டம்